Monday 6th of May 2024 09:57:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழர்களுடன் பகைத்ததால் இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் அரசு  - நாடாளுமன்றில் சிவிவி!

தமிழர்களுடன் பகைத்ததால் இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் அரசு - நாடாளுமன்றில் சிவிவி!


"வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை இலங்கை அரசு அடைந்துள்ளது." - இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்தச் சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணம் கொண்டிருந்த அரசின் கடிவாளத்தை உயர்நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளன என்று கூறியுள்ளது.

இலங்கைக்குள் ஒரு சீன நகரத்தை உருவாக்க முனைகின்றது அரசு என்பதே அதற்கெதிரான குற்றம். பொறுப்பற்ற கடன் வாங்கலும் தமது மனித உரிமை மீறல்களால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்பட்டிருப்பதாலும் சீனாவின் அடியில் போய் விழவேண்டி வந்துள்ளது. இந்த வரைபை வர்த்தமானியில் பிரசுரித்த அதே நாளிலேயே மேலும் ஒரு சீனக் கடனை இந்த அரசு பெற்றுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது.

நாங்கள் தொடர்ந்து அரசுகளிடம் கேட்டு வருவது ஒரே நாட்டினுள் கூட்டு சமஷ்டி முறையில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதே. அதைச் செய்ய விரும்பாமல் எங்கோ இருக்கும் சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது அரசு. அவர்கள் கேட்டபதை எல்லாம் கொடுக்கின்றார்கள். நாங்கள் கேட்பதெல்லாவற்றையும் மறுத்து விடுகின்றார்கள்.

அண்மையில் ஒரு நாடு - ஒரு சட்டம் எனப்பட்டது. அதற்கென்ன நடந்தது? முழு நாட்டின் சட்டம் சீனச் சட்டம் என்றுதான் அவ்வாறு கூறியிருக்கின்றார்களா?

வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளீர்கள்.

மணலாற்றில் சிங்களப் பெபயர் முதன்மை பெறுகின்றது. கொழும்புத் துறைமுக நகரத்தில் சீன மொழி முதலிடம் பெற்றுள்ளது. சில இடங்களில் சீன மொழி மட்டுமே காணக் கூடியதாக உள்ளது.

இந்த நாடு எங்களுக்கும் உரியது. எமது இனம் தனித்துவமான ஒரு இனம் என்பதை வலியுறுத்திக் கொண்டே எமது நாட்டை விற்கவோ ஈடு வைக்கவோ அனுமதி அளிக்க முடியாது.

இந்த வரைபு துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு நாட்டுக்கிருக்கும் சட்டவாக்க உரிமைகளையும் நீதித்துறையின் ஏகோபித்த உரிமைகளையும் தரைவார்த்துக் கொடுத்துள்ளது. மாற்றங்கள் செய்யாவிட்டால் எமது நாட்டினுள் இன்னொரு நாடு பரிணமித்து விடும்.

ஆகவே, உயர்நீதிமன்றம் கூறிய திருத்தங்களை உள்ளடக்கி ஒரு புதிய வரைபை எமக்கு நல்குங்கள். அதைப் படிக்க போதிய அவகாசம் தாருங்கள. அவசரப்பட்டு நாளை (இன்று) வாக்கெடுப்பை நடத்தாதீர்கள்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE